
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசும், நடப்பு சாம்பியமான திண்டுக்கல் டிராகன்சும் இன்று மோதுகின்றன.
லீக் சுற்றில் 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு வீறுநடை போட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூருக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் 203 ரன் இலக்கை நெருங்க முடியாமல் தோல்வியை தழுவியது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடத்தை பிடித்ததால் இறுதிசுற்றை எட்டுவதற்கு இன்னொரு வாய்ப்பு கில்லீசுக்கு கிட்டியுள்ளது.
திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்தது. வெளியேற்றுதல் சுற்றில் திருச்சி கிராண்ட் சோழாசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் அஸ்வின் ஆல்-ரவுண்டராக (83 ரன் மற்றும் 3 விக்கெட்) ஜொலித்தார். ஏற்கனவே கில்லீசிடம் 8 ரன் வித்தியாத்தில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். கில்லீஸ் வாகை சூடினால் 6-வது முறையாகவும், திண்டுக்கல் வெற்றி பெற்றால் 4-வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.