
சென்னை,
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.14 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமில் தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் திருத்தப்பட்ட விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத் தண்டுவடம்/ தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறணணிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
* பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள். இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.