தமிழ்நாட்டில் பெண்களுடைய முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவரது ஆட்சியில் தான் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கியமானது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. புதியதாக ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தொழில் தொடங்க அரசால் கடனும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2023-24ம் ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏழரை லட்சம் மகளிர் குழுக்கள் உள்ளன.
பெண்களும் அர்ச்சகராக ஆகலாம் என தமிழக அரசு அறிவித்து பெண் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகளும் இனி குடும்ப தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டாம் என்பதை நடைமுறைப்படுத்தினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அரசு மகளிர் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக தற்காப்புக்கலை பயிற்சி வழங்குவது என பல திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் குடும்பச்சூழல், வறுமை, காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் பயன்பெறும் வகையில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். உயர்கல்வியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு மாணவிகள் முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள். கல்வியை பொறுத்தவரையில் பெண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிப்பதில் தடைக்கற்கள் இருந்தன.
பெண்களை படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை இருந்தது. பெண்களுக்கு எதிராக படிப்புக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன் என முதல்வர் கூறியுள்ளார். பல்வேறு திட்டங்கள், பாதுகாப்பு ஆகியவற்றால் பெண்களுக்கு துணிச்சல் அதிகரித்துள்ளது. பாலியல் புகார்களில், பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை மாறி, தற்போது துணிச்சலாக புகார் தருகிறார்கள் என்பதை பாராட்ட மனம் இல்லாமல் சில கட்சிகள் போராட்டம் நடத்துவது பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
The post மகளிருக்கான ஆட்சி appeared first on Dinakaran.