*அமைச்சர்கள் பங்கேற்பு
ராமநாதபுரம் : தாய்க்கு சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை மகன்கள் கட்டினர். இதனை அமைச்சர்கள் கீதாஜீவன், ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.ராமநாதபுரம், வஉசி தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராசாத்தி (55) உடல் நலக்குறைவால் கடந்த 2024, ஜன. 26ம் தேதி இறந்தார். மகன்கள் ரவி, ஹரி, சுதன். ராசாத்தி உயிருடன் இருக்கும்போது சொந்தமாக வீடு கட்டும் பணியை மகன்கள் துவங்கியுள்ளனர்.
ஆனால், கட்டுமான பணி முடிவதற்குள் தாய் இறந்து விட்டதால், வீட்டிற்கு முன்பு மணி மண்டபம் கட்டி தாய்க்கு சிலை அமைத்தனர். இதனை அமைச்சர்கள் கீதாஜீவன், ராஜேந்திரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் கலந்து கொண்டனர்.
மகன்கள் ரவி, ஹரி,சுதன் கூறும்போது, ‘‘எங்களது பெற்றோர் வறுமை நிலையிலும் எங்களை படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்றி விட்டனர். அவர்கள் சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் காலத்திற்குள் புதிதாக வீடு கட்டி குடியேற்ற வேண்டும் என கருதினோம்.
ஆனால் எதிர்பாராவிதமாக தாய் இறந்து விட்டார். இதனால் புதிய வீட்டின் முன்பு மணிமண்டபம் கட்டி, அதில் தாயில் 5 அடி உயர சிலையை அமைத்துள்ளோம். தற்போது வயதான பெற்றோரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பது, அடித்து துன்புறுத்துவது போன்றவை அரங்கேறி வருகிறது. பெற்றோரும் கடவுளே என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தாய்க்கு சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டினோம்’’ என்றனர்.
The post மகன்கள் திருப்பி செலுத்திய மரியாதை கருவில் சுமந்த அன்னைக்கு சிலையுடன் மணிமண்டபம் appeared first on Dinakaran.