
மும்பை,
கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த படம் 'லவ் டுடே'. இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றநிலையில், 'லவ்யப்பா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் ஆமீர்கானின் மகன் ஜுனைத் கானும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.
சமீபத்திய பேட்டியில், லவ்யப்பாவின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து அமீர்கான் பேசினார். அதன்படி, லவ்யப்பாவின் தோல்வி, தனது மகனை வலிமையடைய செய்யும் என்றும் கடினமாக உழைக்கத் தூண்டும் என்றும் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜுனைத் கான் அடுத்ததாக சாய் பல்லவியுடன் 'ஏக் தின்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், அமீர்கான் 'கூலி'மற்றும் 'சிதாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார்.