
சென்னை,
தமிழ் மற்றும் மலையாள சினிமா பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் தான். 'மீன் குழம்பும் மண் பானையும்', 'புத்தம் புது காலை', 'ஒரு பக்க கதை' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து கவனம் ஈர்த்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகின 'ராயன்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
காளிதாஸ் ஜெயராம் மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நடிகர் ஜெயராம் தனது மகனின் திருமண அழைப்பிதழுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் நேரில் சந்தித்தார். தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தார்.
கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்காமல் தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.