மகத்தான வாழ்வைத் தரும் மாரியம்மன் தலங்கள்

2 hours ago 2

இந்த அழகான மாரியம்மன் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்காப்பாற்ற சூலம் அதை ஏந்திடுவாய் தினம்கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்! மலையேறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலிட்டோம் உலகாளப் பிறந்தவளே அருள் தருவாய் எங்க வீடெல்லாம் பால் பொங்க வரம் தருவாய்! இப்பாடலில் மாரியம்மன்கோயில் பூஜை முறையே அடங்கியிருக்கிறது. மாரியம்மன் கோயிலில் நோயைத் தீர்ப்பதற்கு வேப்பிலைதான் தருவார்கள். கவலைகளை மாற்றுவதற்கு திருநீறுதான்தருவார்கள். நாம் காட்டும் கற்பூர வெளிச்சத்தின் ஒளியில் அவள் வாழ்கிறாள். நம் கஷ்டத்தைத் தீர்ப்பதற்கு அவள் வருகிறாள். நம் கோரிக்கை நிறைவேறி விட்டால், அவளுக்கு மாவிளக்கு ஏற்றி பொங்கல் இடுகின்றோம். “மா” என்ற சொல்லிலேயே மாரியம்மன் இருக்கிறது. அரிசி மாவினால் ஏற்றும் உருண்டையான அந்த விளக்கு இந்த உலகத்தின் உருவாக அவள் இருக்கிறாள்
என்பதைக் காட்டுகின்றது.

நம் தென்னகத்தில் ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் கோயில்கள் உண்டு. அது இல்லாத கிராமமே இருக்கமுடியாது. சில கிராமங்களில் இரண்டு மூன்று மாரியம்மன் கோயில்கள் கூட உண்டு. இது தவிர, மிகவும் பிரசித்தி பெற்ற, பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடக்கூடிய மாரியம்மன் கோயில்கள், நம்முடைய தென்னகத்தில் உண்டு. ஏன் வெளிநாடுகளிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் உண்டு. ஆங்காங்கே மாரியம்மன் கோயில் ஏற்பட்ட காரணத்தை அறிகின்றபொழுது, பல சுவையான தகவல்களும், உருக்கமான நிகழ்வுகளும், சரித்திரச் சான்றுகளும் நமக்கு கிடைக்கவே செய்கின்றன. இப்பொழுது பிரசித்திபெற்ற சில மாரியம்மன் கோயில்களைப் பற்றிப் பார்ப்போம்.

சமயபுரம் மாரியம்மன்

முதலில் சமயபுரம் மாரியம்மன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். தமிழ்நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சிக்கு அருகே சுமார் 15 கிலோ
மீட்டர் தூரத்தில் உள்ளது.இன்று மிக பெரிதாக இருந்த கோயில் ஒரு காலத்தில் மிகவும் சிறிய கிராமத்துக் கோயிலாக இருந்தது. தமிழ்நாட்டில் பல்லாயிரம் நபர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள்.
மூலவரான சமயபுரம் மாரியம்மன் புன்னகை தவழும் முகத்தோடு கட்சி தரும் அழகு காணக் கிடைக்காத அழகு. எட்டுக் கைகளுடன், தலைமாலை கழுத்தில் அணிந்து, சர்ப்பக் குடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கம்பீரம் அற்புதம்.
பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்பமரமாகும். இதன் வரலாறு சுவையானது
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சமயபுரம் வந்த மாரியம்மன் இவள்.

சோழ மன்னர் ஒருவர், தன் தங்கைக்கு சீதனமாக கண்ணனூர் என ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்தார். பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால், பிற்காலத்தில், அவை அழிந்து, மரங்கள் நிறைந்த காடாக மாறியது. பின்னால் திருத்தி கண்ணனூர் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு.
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீ ரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தார்கள். சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் தற்போதுள்ள “இனாம் சமயபுரம்” என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராமமக்களைக் கூட்டிவந்து அதற்கு” கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.

பின்னால், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து விஜயநகரப் படைவீரர்கள், கண்ணனூரில் முகாமிட்டார்கள். கிராம மக்கள் வழிபடும் மாரியம்மனைகண்டார்கள். தங்கள் வெற்றிக்காக மாரியம்மனை வேண்டிக்கொண்டார்கள். அவர்கள் வேண்டுதல் பலித்தது. வெற்றியின் மகிழ்ச்சியில் இந்தக் கோயிலைக் கட்டினார்கள்.விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்குத் தனியாகக் கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ‘‘சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது. ஒருமுறை இவளின் சந்நதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளையெல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும், நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவாள்.

சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று நடைபெறும் சித்திரைத் தேரும், மாசிமாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூச்சொரிதல் விழாவும் இங்கு விசேஷம். குழந்தை இல்லாத பெண்கள் தாங்கள் கட்டிவரும் சேலையின் முந்தானையைக் கிழித்து, மரத்தில் கட்டி, ஒரு கல்லை வைத்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைப்பேறு ஏற்படும் என்கிற நம்பிக்கை. பொதுவாக அம்மன் சந்நதிகள் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இவ்வூரில் உள்ள ஆதி மாரியம்மன் சந்நதி தெற்கு நோக்கி உள்ளது. இந்த அம்மனை சமயபுரத்து மாரியம்மனின் தாய் என்று கூறுகின்றார்கள்.

நார்த்தாமலை மாரியம்மன் கோயில்

நார்த்தாமலை மாரியம்மன் கோயில் வரலாறு சுவாரஸ்ய மானது. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள நார்த்தாமலைக்கு புதுக்கோட்டையில் இருந்து பேருந்துகள் உண்டு. நார்த்தாமலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம். அக்கிராமத்தில் திடீர் திடீரென்று இனம்புரியாத ஒரு நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள் ஒருவர், தினமும் வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப்பாதையில் நடந்து செல்வார். அப்படிப் போகும் போது ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு பொருள் காலில் இடறுவதும் அந்த இடத்தில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தார். எந்தப் பொருள் தன் காலைத் தடுக்கிறது என்று தேடும்பொழுது அவருக்கு ஏதோ ஒரு கல் மாதிரி இருந்தது. வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார்குருக்கள். கால் தடுக்கிய இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. அதே நேரம் ஒரு குரல் அவர் மனதின் உள்ளிருந்து பேசியது. “அருகில் உள்ள மலையடிவாரத்தில், எனக்குக் கோயில் எழுப்பி வழிபடுங்கள். சுற்றியுள்ள ஊர்மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான் காப்பாற்றுகிறேன்” என்றது அந்தக் குரல்.அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோயில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு “முத்துமாரி” என்று பெயர். அம்பாளுக்கு “பூவாடைக்காரி” என்ற பெயரும் உண்டு.இந்தக் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் மிகவும் சிறப்பு. நீண்டகாலமாக உடலில் பல விதமான நோய்களால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலில் அக்னி காவடி எடுத்து வழிபடுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் கரும்பில் தொட்டில்செய்து அம்பாளை வழிபடுகிறார்கள்.

பண்ணாரி மாரியம்மன் கோயில்

ஈரோட்டிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் மைசூர் பாதையில் உள்ளது பண்ணாரி மாரியம்மனது கோயில். சத்தியமங்கலம் வனப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலார்ந்த சூழலில், மிக அற்புதமான சூழலில் உள்ள பண்ணாரி மாரியம்மனது கோயில் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கிறது.வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் தினசரி சலவைத்துணி துவைப்பதற்காக அவ்வூரிலுள்ள மலை அருகே ஓடும் ஆற்றின் துறைக்கு எடுத்துச்செல்வது வழக்கம்.ஒருமுறை அந்தப் பெண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாது அவள் கணவனோடு துணி துவைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றாள். திடீரென்று கடுமையான மழை பெய்தது. அந்தச் சமயத்தில் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. கணவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

வெட்டவெளியில் தன்னுடைய மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் துணிந்தார். சலவைக்குக் கொண்டு வந்த சேலைகளைக் கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்தன. மகிழ்ச்சியோடு இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தூக்கியபோது ஒரு குழந்தையைத்தான் தூக்க முடிந்தது. மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. அவர்கள் அந்தக் குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு, நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர். அவர் ஆச்சரியப்பட்டு, சில ஆட்களை அவர்களோடு அனுப்பினார். அவர்கள் முயன்று பார்த்தும் அந்த குழந்தையைத் தூக்கமுடியவில்லை. பின் இரும்புக் கடப்பாரை கொண்டு அந்த தாழியைத் தூக்க முற்பட்டனர்.

அப்படியும் அவர்களால் தூக்க முடியவில்லை. ஏதோ அதிசயம் என்று அப்படியே வைத்துச் சென்றனர். மறுநாள் காலையில் சென்று பார்க்கும்போது ஒரு அழகான அம்மன் சிலையாக அக்குழந்தை காட்சியளித்தது. ஊர் மக்கள் அனைவரும் கூடி ஒரு கோயில் எழுப்பினர். ஊர் திருவிழா வந்தது. கொங்குநாட்டு வழக்கப்படி பச்சைமாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். அப்போது அந்த சலவைத் தொழிலாளிப் பெண் அம்மனுக்கு படைப்பதற்காக, பச்சைமாவுக்கு வசதி இல்லாமல், புளியங்கொட்டையைக் கொண்டுஇடித்து அதில் மாவு செய்து தெற்குநோக்கிக்கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது.

இன்னொரு சுவையான கதையும் தலவரலாறு சொல்கிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் ஆடுமாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு வருவது வழக்கம். ஒரு நாள் பசுமாடு ஒன்று மந்தையிலிருந்து விலகி ஏதோ ஒரு இடத்திற்குச் சென்று பால்சொரிந்து வருவதைக் கவனித்தனர். பால் பொழியும் இடம் ஒரு வேங்கைமரத்தின் அடிப்பகுதி. அந்த இடத்தைச் சுத்தம் செய்து பார்த்தபொழுது, ஒரு புற்றும், சுயம்பு மேனியும் இருந்தது, அப்பொழுது ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘‘கேரளாவிலிருந்து மைசூருக்கு ஆடுமாடுகளை ஓட்டிச் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்த நான் இவ்விடத்தின் எழிலில் தங்கிவிட்டேன். இனி பண்ணாரி மாரியம்மன் என்று போற்றி வழிபடுங்கள்’’ எனக் கட்டளையிட்டதாகவும், அந்த இடத்தில் ஒரு குடிசையை அமைத்து மக்கள் வழிபடத் தொடங்கியதாகவும், காலப்போக்கில் இது புகழ்பெற்ற கோயிலாக மாறியதாகவும் சொல்லுகின்றனர். இக்கோயிலில் அக்னி குண்டம் இறங்குவது மிகவும் சிறப்பு. இக்கோயிலில் விபூதி வழங்குவது கிடையாது. புற்றுமண்தான் விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் உள்ளது. இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.
பொதுவாக அம்மன் இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பாள். ஆனால் இந்த அம்மன் வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு இருப்பது சிறப்பு.
தொடக்கத்தில் அர்ஜுனாநதி மற்றும் வைப்பாறுநதிகளுக்கு இடையே உள்ள மேட்டுப்பகுதியில் சதுரகிரிமலைச் சித்தர் ஒருவர் அம்பாளை தரிசனம் வேண்டி தவம் இருந்தார். அம்பாள் அவருக்குக் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் ஒரு சிலையாக பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தார். பிற்காலத்தில் இந்தச் சிலை ஆற்றுமணலில் புதைந்துபோனது.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பொறுக்க வந்த இருக்கன்குடி கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்றிருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து
ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் அம்மனைக் குறி காட்ட, அங்கே மணலை எடுத்துப் பார்த்தபோது, அம்மன் சிலை கிடைத்தது. கோயில் அமைத்து வணங்கிவந்தனர். வணங்கும் மக்களின் அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றியதால் கோயில் பிரபலமாகியது. கரும்புத்தொட்டில் நேர்த்திக்கடன் விசேஷம்.

வண்டியூர் மாரியம்மன்

மதுரை என்றாலே மாரியம்மன் தெப்பக்குளம் நினைவுக்கு வந்துவிடும். வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் அவ்வளவு சிறப்பு. மதுரைநகரின் காவல்தெய்வம் என்று சொல்லலாம். மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன.
மூலவரான மாரியம்மனுக்கு ‘‘பேச்சியம்மன்” என்ற திருநாமம் உண்டு. புராணத்தில் இவ்வூருக்கு மாமண்டூர் என்ற பெயர். தைப்பூசத் தெப்பத் திருவிழாவும் பங்குனிமாத பிரம்மோற்சவமும் பூச்சொரிதல் விழாவும் இங்கு மிகவும் சிறப்பு.மதுரை மக்கள் எந்த வீட்டு விசேஷங்கள் என்றாலும் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு நடத்துகின்றார்கள். அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் இங்கு விசேஷம். கண்நோய், அம்மைநோய், போன்ற நோய்களைத் தீர்க்கிறது.ஒரு காலத்தில் இப்பகுதியில் மகிழமரங்கள் அடர்த்தியாக இருந்தன. சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அவர்கள் தரும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே, மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் படையோடு வந்து விரட்டியடித்தார். அப்பொழுது அங்கு இருந்த அம்மனுக்கு கோயில் கட்டினார். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின்மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவாரத் தெய்வங்கள் கிடையாது.

 

The post மகத்தான வாழ்வைத் தரும் மாரியம்மன் தலங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article