சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27% உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல அரசின் இந்நடவடிக்கை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கும். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60% அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 246% அகவிலைப்படி உயர்வு பெற வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 146% அளவுக்கும், ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைப்படி 53% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 14% அளவுக்கும் மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், 2025 -26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
The post போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.