போலீசார் போல் நடித்த கொள்ளை கும்பல் கைது: கஞ்சாவை கைமாற்றும்போது சிக்கியது

3 months ago 16

பெரம்பூர்: சென்னை எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், காருக்குள் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் தொப்பி, லத்தி, போலி நம்பர் பிளேட்கள் ஆகியவை இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரில் இருந்த 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், போலீஸ் எனக்கூறி ஹவாலா பணத்தை குறிவைத்து கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைவனான வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த இம்ரான் (41), அவனது கூட்டாளிகளான சென்னை கொடுங்கையூர், தென்றல் நகரை சேர்ந்த கருணாகரன் (39), மணலி, பெரியார் நகரை சேர்ந்த நூர்முகமது (38), திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த மாபாட்ஷா (29) எனத் தெரியவந்தது.

குறிப்பாக, யானைகவுனியில் ₹1.40 கோடி ஹவாலா பணத்தை போலீஸ் எனக்கூறி கொள்ளை அடித்து சென்ற வழக்கில் இம்ரான் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. மேலும், மயிலாப்பூர் பகுதியில் ₹1.50 கோடியை திருடி சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், போலீசாக நடித்து கஞ்சாவை கைமாற்றும்போது தனது கூட்டாளிகளுடன் இம்ரான் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுதவிர, இம்ரான்மீது மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம், தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 22 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தான் பல ஆண்டுகளாக குருவிகள் மற்றும் ஹவாலா பணத்தரகர்களை குறிவைத்து, அவர்கள் பணத்தை கைமாற்றுமப்போது, அவர்களை மறைந்திருந்து கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மூளையாக செயல்படுவதும், போலீசாரை போல் நடித்து இக்கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்ததும், அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே இம்ரான் சட்டப்படிப்பை முடித்திருப்பதும் தெரியவந்ததுள்ளது.

தற்போது சென்னையில் ரவுடிகளின் நடமாட்டம் குறைந்திருப்பதாலும், குற்ற செயலுக்கு எதிராக காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும் ஹவாலா பணப் பரிமாற்றங்கள் கட்டுக்குள் உள்ளன. இதனால் அத்தொழிலை செய்ய முடியாததால் மீண்டும் கஞ்சா தொழிலில் இறங்கியதாக இம்ரான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இம்ரான் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், போலீசார் பயன்படுத்தும் தொப்பி, லத்தி, போலி நம்பர் பிளேட்கள், 2 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போலீசார் போல் நடித்த கொள்ளை கும்பல் கைது: கஞ்சாவை கைமாற்றும்போது சிக்கியது appeared first on Dinakaran.

Read Entire Article