*ஆணையாளர் உத்தரவு
திருப்பதி : திருப்பதி மாநகராட்சியில் ஆய்வு செய்து, கால்வாய்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பதி மாநகராட்சி ஆணையாளர் மவுரியா நரபு ரெட்டி நேற்று திருப்பதி நகரில் சப்தகிரி நகர், யசோதா நகர், பிரசாந்த் நகர், ரயில்வே கழனி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரம், பொறியியல், நகரமைப்பு, வருவாய்த்துறை அலுவலர்களுடன் துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்து மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.
பாதாள சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் மவுரியா பேசியதாவது: சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதால், சாக்கடைகள் தேங்கி நிரம்பி வழிகிறது. மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். குப்பைகள் கண்ட இடங்களில் எறியாமல், ஈர மற்றும் உலர் குப்பைகளை தனித்தனியாக பணியாளர்கள் வழங்க வேண்டும்.
கால்வாய்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
பாதாள சாக்கடை கால்வாய்கள் எங்கும் நிரம்பி வழிந்தால், ஊழியர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுகாதாரத்தை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது கமிஷனருடன் கூடுதல் கமிஷனர் சரண் தேஜ் ரெட்டி, கண்காணிப்பு பொறியாளர் ஷியாம்சுந்தர், நகராட்சி பொறியாளர் கோமதி, சுகாதார அலுவலர் யுவா அன்வேஷ், வருவாய் அலுவலர் சேதுமாதவ், டிஇ பிரசாத், ஏசிபி மூர்த்தி, சர்வேயர் கோட்டேஸ்வர ராவ், துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post திருப்பதி மாநகராட்சியில் ஆய்வு கால்வாய்களில் குப்பை கொட்டினால் அபராதம் appeared first on Dinakaran.