
சேலம்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகில் மதுவிற்றதாக, ஒதியத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி ஜெயசித்ரா (வயது 38) போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த சிலர் ஜெயசித்ராவுக்கு ஆதரவாக கைது செய்யக்கூடாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ராஜா மற்றும் அவரது நண்பர்களான அரசு பஸ் டிரைவரான ஜெயச்சந்திரன் (51) மற்றும் அரசு பஸ் கண்டக்டர் நீலகண்டன் ஆகியோரை கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசாரின் அறிக்கை கிடைத்ததை தொடா்ந்து, அரசு பஸ் டிரைவர் ஜெயச்சந்திரன், கண்டக்டர் நீலகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து அரசு போக்குவரத்துக்கழக சேலம் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.