
சென்னை,
தமிழக சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது:-
மகளிர் விடியல் பயணம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் 675 கோடியே 98 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு வருகின்ற நிதியாண்டிற்கு ரூ.3,600 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார்.
அதே போன்று, புதிய பஸ்கள் வாங்க 2024-2025-ம் ஆண்டு ரூ.1,535.89 கோடியை ஒதுக்கி 3 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதிலே 1,210 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஜெர்மன் வங்கி உதவியுடன் 552 தாழ்தள பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மேலும் ஜெர்மன் வங்கி உதவியுடன் 1,214 சாதாரண டீசல் பஸ்கள் வாங்குவதற்கு 7-10-2024 அன்று ஒப்பந்தம் விடப்பட்டு, விரைவிலே அந்தப் பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அதேபோல, ஜெர்மன் வங்கியின் மூலமாக 500 மின்சாரப் பஸ்கள் வாங்குவதற்கு 11-10-2024 அன்று ஒப்பந்தம் விடப்பட்டு அந்தப் பஸ்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், இந்த 2025-2026-ம் ஆண்டிற்கு 3 ஆயிரம் புதிய பஸ்களைக் கொள்முதல் செய்வதற்கு முதல்-அமைச்சரால் உத்தரவிடப்பட்டு, அதுவும் தற்போது ஒப்பந்த நிலையில் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மொத்தம், 3,778 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. மீதி 8,129 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளன. மேலும், காற்று மாசுபடுவதைத் தடுக்க, 746 புதிய இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) பஸ்களை வாங்கவும், இயங்குகின்ற பஸ்களில் ஆயிரம் பஸ்களை சி.என்.ஜி. பஸ்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.