
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தி கொன்றது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்றும் 14 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர் என்றும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே கடந்த நவம்பர் முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பெய்ரூட் நகர் மீது முதன்முறையாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
4 முறை நடந்த இந்த தாக்குதல்களில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் அமைந்த ஹடாத் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டம் ஆனது. அதில் இருந்த குடியிருப்புவாசிகள் தப்பி வெளியே ஓடினர். அந்த கட்டிடத்திற்கு அருகே இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகளும் தாக்குதலில் சேதமடைந்தன.
எனினும், இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் கூறும்போது, ஆளில்லா விமானங்களை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்திருக்கும் ராணுவ கிடங்கை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் எதிரொலியாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. எனினும், கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட 2 முறை நடந்த தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளது. வேறு எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை.
இதுபற்றி லெபனான் பிரதமர் நவாப் சலாம், ராணுவ அதிகாரிகளிடம் கூறும்போது, ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, உடனடியாக அவர்களை கைது செய்யும்படி கூறினார். இந்த தாக்குதல் லெபனானின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அவருடைய அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.