போர் பதற்றம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆக்டோபஸ் படை வீரர்கள் ஒத்திகை

5 hours ago 1

திருமலை,

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆக்டோபஸ் படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் ஆக்டோபஸ், காவல்துறை, உளவுத்துறை, பாதுகாப்புத் துறைகள், வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்ப நாய் படையைச் சேர்ந்த சுமார் 130 பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஏழுமலையான் கோவில், தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் போன்ற நெரிசலான பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்த ஒத்திகையின் நோக்கம் பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எச்சரிக்கையாகச் செயல்படுவதும் ஆகும். சந்தேகத்துக்கிடமான நபர்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் பொருட்கள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்று ஆக்டோபஸ் படை பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் படை வீரர்கள் விழிப்புடன் உள்ளனர். ஆக்டோபஸ் படை வீரர்கள் பக்தர்களுக்கான முழு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு மையம் (சி.ஆர்.ஓ), அரசு பஸ் நிலையம், ஏழுமலையான் கோவில், நந்தகம் தங்கும் விடுதி பகுதி, மங்களம் பாய் காட்டேஜ், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆக்டோபஸ் படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து திருமலை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுதவிர திருமலையில் உள்ள மடங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தேவஸ்தான பறக்கும்படை அதிகாரி சுரேந்திரா, ஆக்டோபஸ் படை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Read Entire Article