
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றியுள்ளது. தூதரக நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் இருந்து இந்திய தூதர்களை வெளியேறியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவப்பட்டு தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை நடத்தியுள்லது. இந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றதாகும். இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை தாக்கி செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.