
லாகூர்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. பயங்கரவாதிகளும் தாக்குதலில் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலின்போது, எக்ஸ் சமூக தளத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து இருந்தது. தேசிய பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதனால், அந்நாட்டின் பொதுமக்கள் எக்ஸ் தளத்தின் பயன்பாடுகளை பெற முடியாமல் இருந்தது. எனினும், வி.பி.என். உதவியுடன் அவற்றை மக்கள் பயன்படுத்த கூடிய சூழல் இருந்தது.
இந்நிலையில், ஓராண்டுக்கும் மேலாக விதிக்கப்பட்டு இருந்த தடையை பாகிஸ்தான் அரசு இன்று நீக்கியுள்ளது. இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்த நிலையில், எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. இதன்படி, வி.பி.என். உதவியின்றி அவற்றை மக்கள் பயன்படுத்த முடிகிறது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் பாகிஸ்தான் மக்கள் தகவல்களை பகிர வசதியாக எக்ஸ் தளம் மீது விதித்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியிருக்கிறது.