
இந்தியாவின் அழகு ராணியாக கருதப்படும் காஷ்மீரில் உள்ள பைசரான் புல்வெளியில் கடந்த மாதம் 22-ந்தேதி 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், அந்த நாட்டு ஆதரவுடன் இயங்கிவரும் காஷ்மீர் பயங்கரவாதி ஒருவரும் என 4 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாத நேரத்தில் இப்படி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளை சுட்டுக்கொன்றவுடன் பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுக்கும்' என்று கூறினார். இது மக்களுக்கு ஆறுதலைக்கொடுத்தது.
சொன்னதை செய்வதுபோல, நேற்று முன்தினம் நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாதிகள் வசித்து வந்த 9 இடங்களில் உள்ள 21 முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு 'சிந்தூர் ஆபரேஷன்' என்று பெயரிடப்பட்டது. இதற்கு ஒரு காரணம் உண்டு. பஹல்காமில் பயங்கரவாதிகள் சுட்டதில் 26 பெண்கள் தங்களது கணவன்களை இழந்ததோடு, நெற்றியில் அவர்கள் வைத்திருந்த 'சிந்தூர்' என்ற குங்குமத்தையும் இழந்தனர்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கத்தான் அந்த பெண்கள் இழந்த 'சிந்தூர்' பெயரில் இந்த அதிரடி தாக்குதலை இந்தியா தொடர்ந்தது. இந்த தாக்குதலையும் சகட்டுமேனிக்கு ஒன்றும் நடத்திவிடவில்லை. நமது உளவுத்துறையினர் தந்த நம்பத்தகுந்த உறுதியான தகவல்கள் அடிப்படையில் இஸ்ரோ செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் கண்டறியப்பட்டன. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்குதான் பாகிஸ்தான் ராணுவமும், அவர்களின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் நிதி, ஆயுத உதவி மட்டுமல்லாமல் தாக்குதல்களுக்கான பயிற்சியையும் அளித்து வருகிறது.
எனவே அந்த முகாம்களை குறிவைத்துதான் இந்தியா தாக்குதலை நடத்தியது. இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, "பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அந்த நாடு தவறிவிட்டது. பஹல்காம் தாக்குதல் மட்டுமின்றி கடந்த 30 ஆண்டுகளாகவே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்திருக்கின்றனர். இதில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த ஆபரேஷன் 'சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது" என்றார். இந்த தாக்குதல்கள் எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து ராணுவ பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர்தான் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் இந்த தாக்குதல் நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரையிலான 25 நிமிடங்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். அதில் வியோமிகா சிங் தனது பள்ளி, கல்லூரி படிப்பை தமிழகத்தில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிக்கப்பட்டன. அந்த நாட்டு மக்கள் மீதோ, ராணுவத்தினர் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை. எனவே மிக துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக இந்திய ராணுவத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய பகுதியில் நடத்திய துப்பாக்கி சூட்டின் விளைவாக எந்த பாவமும் அறியாத அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதான் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் உள்ள வித்தியாசம். இந்த துல்லிய தாக்குதலுக்காக நமது முப்படைகளுக்கு புகழ் மாலைகளை சூட்டிக்கொண்டே இருக்கலாம். அதேபோல இந்த நேரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம்.