டெல் அவிவ்,
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.மேலும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் அமெரிக்கா உள்பட பல நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
ஹமாஸ் அமைப்பினரின் இந்த திடீர் தாக்குதலால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் காசா மீது உடனடியாக போரை தொடங்கியது. கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சண்டை நீடித்து வந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டன.இந்த பேச்சுவார்த்தையின் பயனாக காசாவில் போர் நிறுத்தம் செய்யவும், ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்கவும் இரு தரப்பும் அண்மையில் ஒப்புக்கொண்டன.இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில் இஸ்ரேலும், ஹமாசும் கடந்த 15-ந் தேதி கையெழுத்திட்டன.
போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுப்பதற்காக இஸ்ரேல் மந்திரி சபை நேற்று அதிகாலை கூடியது. பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்ததுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமலுக்கு வர சில மணி நேரங்களே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பாரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார். பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது: ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்பட உள்ள பணையக்கைதிகளின் பட்டியலை வெளியிடாதவரை இதை (ஒப்பந்தம்) நாம் முன்னெடுத்து செல்ல முடியாது. ஒப்பந்தத்தில் விதி மீறல் இருந்தால் அதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே இதற்கு முழு பொறுப்பு" என்றார். தொடர்ந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு, தேவைப்பட்டால் அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. பணையக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதை நான் உறுதி செய்வேன்" என்றார்.