வாஷிங்டன்: போரை நிறுத்தியதை போல, காஷ்மீர் பிரச்னையிலும் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் 4 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தன. போர் நிறுத்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் ஆளாக தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில்,
‘‘இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான, அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு வலிமையும், ஞானமும், மன உறுதியும் இருப்பதால் தான், இப்போர் பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் என்பதை உணர்ந்து அதை நிறுத்த வேண்டிய நேரத்தை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இதற்காக உங்கள் இரு நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். மேலும், ஆயிரம் ஆண்டுகளாக தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்னையிலும் தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். போரை நிறுத்தியதற்காக இந்திய, பாகிஸ்தான் தலைமையை கடவுள் ஆசிர்வதிப்பாராக’’ என்றார்.
காஷ்மீர் விவகாரம் இருதரப்பு சம்மந்தப்பட்டது என்றும் இதில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கையாக இருந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூக்கை நுழைக்க முயற்சிப்பது இந்திய மக்கள் விரும்பத்தகாததாக பார்க்கப்படுகிறது.
பாக். பாராட்டு
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதை நோக்கமாக கொண்ட டிரம்ப்பின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும், அவரது விருப்பத்தை பாராட்டுவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
The post போரை நிறுத்தியதை போல காஷ்மீர் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய தயார்: மூக்கை நுழைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.