போரூர் அருகே ஹெல்மெட், லுங்கி அணிந்து பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

1 month ago 10

குன்றத்தூர்: போரூர் அருகே ஹெல்மெட் லுங்கி அணிந்து வந்து பைக்கினை திருடி செல்லும் மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போரூர் அடுத்த கொளப்பாக்கம், பெரியார் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தினமும் தனது பைக்கினை நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் இரவும் தனது பைக்கினை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை ராஜ்குமார் பைக்கை எடுக்க வந்தபோது, தனது பைக் மாயமாகி இருப்பதையும், அவரது அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் ஒரு பைக் கேட்பாரற்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.அதில், ஒரு மர்ம நபர் லுங்கி அணிந்தவாறு, ஹெல்மெட் போட்டபடி மற்றொரு பைக்கை தள்ளிக்கொண்டு வந்து, அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு, அக்கம் பக்கம் நோட்டமிட்டபடி ராஜ்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பின் கதவை திறந்து உள்ளே நுழைந்து, தனது முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருக்க, ஒரு துணியை எடுத்து கண்காணிப்பு கேமராவின் மீது போட்டுவிட்டு அங்கிருந்த ராஜ்குமாரின் பைக்கினை திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதைவிட பைக்கினை திருடிச்சென்ற நபர் வேறு யாரும் உள்ளே சென்று, மற்ற வாகனங்களை திருடக்கூடாது என்பதற்காக, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் உள்ள இரும்பு கதவை சாத்தி விட்டுச்சென்ற ருசிகரமான சம்பவமும் அரங்கேறியது. இதுகுறித்து ராஜ்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்காடு போலீசார், மர்ம நபர் நிறுத்திவிட்டு சென்ற பைக்கை பறிமுதல் செய்து, பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் யார்? எதற்காக தான் கொண்டு வந்த பைக்கை நிறுத்திவிட்டு, வேறு பைக்கை திருடிச்சென்றான். அவர் கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்ற பைக்கும் திருடப்பட்ட வாகனமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போரூர் அருகே ஹெல்மெட், லுங்கி அணிந்து பைக் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article