போராட்ட பின்னணியில் புல்லட்சாமி இருப்பதை அறிந்து அதிர்ச்சியான தாமரை தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 5

‘‘கோஷ்டி பூசலால் அதிர்ச்சி ஆகிட்டார் போல மாஜி அமைச்சர்…’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்திற்கு இலை கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திடீர் விசிட் அடித்தார். தொடர்ந்து, அவர் முறுக்குக்கு பெயர் போன ஊர் இலை கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாராம். இதில், இலை கட்சியில் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் குறித்து அவர் விசாரித்தாராம். இது சம்பந்தமாக முக்கிய நிர்வாகிகள் சிலரை கடிந்து கொண்டாராம். இனி கோஷ்டி பூசல் தொடர்ந்தால், அதிரடி நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கை செய்தாராம். முக்கியமாக, சட்டமன்ற தேர்தலுக்கு இப்பவே தயாராக வேண்டும் என அறிவுரை வழங்கினாராம். இதை இலை கட்சியினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மின்னல் வேகத்தில் வந்து பறந்தாராமே பெங்களூருக்காரரு..
‘‘உடைந்து கிடக்கும் இலைக்கட்சியை ஒன்றிணைக்க போறேன்னு சொல்லிக்கிட்டு களம் இறங்கியவர்தான் பெங்களூருக்காரரு.. இவரு பின்னால் ரெண்டு மாஜிக்கள் சேர்ந்து கடைவிரித்தாலும் யாரும் திரும்பி கூட பார்க்கலையாம். இதனால ரொம்பவே மனம் வெதும்பியிருக்கும் அவரு, இலைக்கட்சி தலைவரின் மாங்கனி ஊருக்கு வந்தாராம். கட்சியின் தொடக்கவிழாவை கொண்டாட நினைத்த அவர், சிலைக்கு மாலை போட முடிவு செஞ்சிருக்காரு. அவரது ஆதரவாளரான தேனிக்காரரின் மா.செ.வை தொடர்பு கொண்டிருக்காரு.. அவரோ இந்த பெங்களூருகாரருக்கு நெருக்கமானவரு தான். என்றாலும் போனை எடுக்காமல் கடுக்கா கொடுத்திட்டாராம்.. காக்கி துறையில் அனுமதி கேட்கும் வகையில் உயரதிகாரி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு சிலைக்கு மாலை போடுவதற்கு அனுமதி கேட்டிருக்காரு. அந்த அதிகாரியோ, உங்கமேல புகார் இருக்கும் பட்சத்துல எப்படி நீங்க மாலைபோடுவீங்கன்னு ஒரு வெடிகுண்டை உருட்டி விட்டிக்காரு.. சமீபத்துல இலைக்கட்சி சட்டப்பிரிவு நிர்வாகிகள், இலைக்கட்சி தலைவரை அவதூறாக பேசியதாக பெங்களூருக்காரர் மீது ஐந்து பக்க புகாரை காவல்துறையில் கொடுத்திருக்காங்க. இதனை கேட்டதும் பெங்களூருக்காரரு ரொம்பவே ஷாக் ஆகிட்டாராம். எத்தனையோ வழக்குகளை சந்திச்ச என்னையே இலைக்கட்சி தலைவரின் ஆதரவோடு மாலை போடவிடாம மிரட்டுவதாக அவர் சொல்லியிருக்காரு… என்றாலும் ஏரியா இன்ஸ்பெக்டரிடம் தகவலை சொல்லிட்டு தலைவர்களின் சிலைக்கு மாலை போட்டுட்டு மின்னல் வேகத்தில் பறந்துட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போராட்ட பின்னணியில் புல்லட்சாமி இருக்கிறதா அப்செட்டில் இருக்காமே ஒன்றிய கட்சி தரப்பு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் ரவுடிகள் அட்டூழியம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. செயின்பறிப்பு, மாமூல் தாக்குதல், வெடிகுண்டு வீச்சு சம்பவங்களால் வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இதை கண்டித்து பொதுநல அமைப்புகள், சுயேச்சை மக்கள் பிரதிநிதியுடன் இணைந்து நிர்வாகியின் மாளிகை பக்கம் போராட்டத்தில் குதிக்கவே டென்ஷன் ஆனது ஒன்றிய ஆளும் தரப்பு. இதன் எதிரொலிதான் சட்டசபையில் புல்லட்சாமி அறையில் நடுநிலை நாயகருக்கும், போராட்ட சுயேச்சை எம்எல்ஏவுக்கும் வெடித்த மோதல். ஒன்றிய ஆளும் தரப்பு கட்சி, அரசுக்கு எதிராக செயல்பட்ட சுயேச்சைக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில் அங்கிருந்த புல்லட்சாமியோ எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் வேடிக்கை பார்த்த நிலையில், நடுநிலை நாயகருக்கு ஆதரவாக மாநில தலைமையில் இருந்து அடுத்த சில மணிநேரத்தில் சுயேச்சைக்கு எதிராக கண்டன அறிக்கை வெளிவந்தது.

ஆனால் சுயேச்சை போராட்டத்தின் பின்னணியில் புல்லட்சாமி இருப்பதாக அரசல் புரசலாக தகவல் உலாவும் நிலையில், சில இயக்கங்கள் பதிலடியாக ஒன்றிய ஆளும் தரப்பு கட்சி நிர்வாகிகளை நேரடி கள ஆய்வுக்கு அழைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதுதான் புதுச்சேரி அரசியல் ஹைலைட் என்கிறார் நம்ம விக்கியானந்தா….’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜிக்கள் ஏன் கிலியில் இருக்கிறார்களாம்..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தொடர் வீழ்ச்சி தொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைகள் ரகசிய ஆய்வில் ஈடுபட்டுள்ளதாம். இதில் தென்மாவட்டங்களில் கட்சி தொடர்ந்து தேய்மானம் அடைந்து வருவதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த மாஜி மந்திரிகளின் செயல்பாடுகள், தலைவி கண்ட்ரோலில் இருந்தளவுக்கு தற்போது இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாம். தூங்காநகரத்தில் ஒரு மாஜி எப்போதும், தாமரைக்கட்சியின் மாஜி தலைமையை விமர்சித்து வருவதோடு தன் வேலை முடிந்ததாக ஒதுங்கிக் கொள்கிறார்; மற்றொருவர் எப்போதாவது தூங்கி விழிச்சது போல, ஒரு அறிக்கை விட்டு விட்டு திடீரென டோல்கேட் போராட்டத்தில் ஒரு நாள் சீனை போட்டு அவரும் எஸ்கேப் ஆகிறார்; பூட்டு மாவட்டத்தில் இருக்கும் 2 மூத்த சீனியர் மாஜிக்களின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை.

இருப்பதிலேயே ஹனீபி மாவட்டம் படு வீக்காக இருக்கிறது. மெடல் மாவட்டத்தில் பல கயிறுகள் கட்டி திரியும் மாஜி பால்வளம் சைலண்ட் மோடுக்கு போய் பல மாதங்களாகி விட்டது. கடலோர புர மாவட்டத்தில் டாக்டர் மாஜி உட்பட பல மூத்த தலைகள் நிலைமையும் கவலைக்கிடம். லிங்கம் பெயரை கொண்ட கடவுளின் பெயரில் துவங்கும் ஆறு மாவட்டத்திலும் இதே நிலை என்ற தகவல் தலைமைக்கு போயிருக்கிறது. இருக்கும் சூழலில் இவர்களை மாவட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்து மாற்றலாமா அல்லது மூன்றாவதாக மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் ஒருவரை தமிழகம் முழுவதும் நியமிக்கலாமா என்ற பேச்சும் ஓடுகிறதாம்… இதனால் இலைக்கட்சியின் மாஜிக்கள் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மனநிலையில் பயத்துடன் இருக்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post போராட்ட பின்னணியில் புல்லட்சாமி இருப்பதை அறிந்து அதிர்ச்சியான தாமரை தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article