போப் பிரான்சிஸ் காபி சாப்பிடுகிறார், செய்தித்தாள் படிக்கிறார்: வாடிகன் தகவல்

3 hours ago 1

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் (வயது 88) இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறுகிறார்.

இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறும்போது, வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார். சமீப காலங்களாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது.

இதனால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதற்கு முன்பு, கடந்த 2023-ம் ஆண்டு நிம்மோனியா பாதிப்புக்காக போப் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் போப், பத்திரிகை வாசிப்பது உள்பட சில அன்றாட பணிகளை செய்து வருகிறார். அவருடைய நிலைமை சீராக உள்ளது என்று புரூனி கூறினார்.

போப் பிரான்சிஸ் நிம்மோனியா பாதிப்பில் இருந்து விடுபட்டு 2 வார காலம் ஆன நிலையில், திடீரென நேற்று அவருடைய உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் அவருக்கு திடீரென இருமல் ஏற்பட்டது. அப்போது சுவாசிக்கும்போது, வாந்தியை உள்ளிழுத்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதனை வெளியே எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதனை எப்படி மேற்கொள்வது மற்றும் இந்த நிகழ்வால், போப்பின் ஒட்டுமொத்த மருத்துவ நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்கும் இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை டாக்டர்கள் அதிக பாதிப்பில்லாத வென்டிலேசன் (உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு) பிரிவில் வைத்து நேற்று சிகிச்சை அளித்தனர். அவர் ஆபத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதன்பின்னர், இன்று காலை அவருடைய உடல்நிலை தேறி வருகிறது என டாக்டர்கள் கூறியுள்ளனர். போப் அவராகவே எழுந்து, காபி சாப்பிடுகிறார். உணவையும் எடுத்து கொள்கிறார். செய்தித்தாள் படிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. எனினும், 5-ந்தேதி வரும் சாம்பல் புதன் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.

Read Entire Article