போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

7 hours ago 1

சென்னை: தமிழகத்தில் தொடர்ச்சியாக போதைப் பொருள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டிவாக்கம், அரசு உதவி பெறும் ஒஎம்சிஏ பள்ளியில் பயிலும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று பள்ளியிலிருந்து கல்லுக்குட்டை, கண்ணகிநகர் ஆகிய வழித்தடங்களில் 2 புதிய பேருந்து வசதிகள் சேவையினை கொடியசைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் காலத்திற்குள் பொது சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு சொல்லப்படும் அறிவுறுத்தல்கள் என்பது தொடரும். எந்தவிதமான குளிர்பானங்கள் அருந்த வேண்டும், எந்த மாதிரியான பழங்களை அருந்த வேண்டும், எந்தெந்த நேரத்திற்கு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் வெளியில் வர வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படும்.

குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். போதைப் பொருள் நடமாட்டத்திற்கு உறுதுணையாக இருந்து தொடர்ச்சியாக போதைப் பொருள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் எல்லாம் கூட பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு வகையான நடவடிக்கைகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்அரவிந்த் ரமேஷ், சென்னை, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், பொது மேலாளர் நெடுஞ்செழியன், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மதியழகன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலின் சாம்லா மற்றும் அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article