சென்னை: “தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பாஜக கட்சியில் இணைத்துள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட காவல் பகுதிகளில் NDPS சட்டத்தில் மட்டும் கைதான பாஜகவைச் சேர்ந்த 14 ரவுடிகள் மீது 23 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் கூட பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்? போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக போலீஸார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்” என்று வழக்கம் போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் மாளிகைக்குள்ளும் வெளியேவும் அரசியல் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி . ஆளுநர் மாளிகையை “கமலாலயம்” ஆக மாற்றி, தான் இருப்பது ஆளுநர் பதவி என்பதையே மறந்து செயல்படும் ஆளுநர் ரவி போன்ற ஆளுநர்கள் அந்தப் பதவிக்கு தினந்தோறும் இழுக்கு தேடி வருவது கவலையளிக்கிறது.