தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை கட்டுப்படுத்தி மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது பாஜக

14 hours ago 2

* பெரும்பான்மையை இழந்திருந்தாலும் 2024-க்கு முன்பு இருந்த பலத்தை காட்டியது
* சைலண்ட் மோடில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான்

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை கட்டுப்படுத்தி மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. தனது பெரும்பான்மை பலத்தை இழந்திருந்தாலும், கடந்த 2024ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பலத்தை பாஜக காட்டியுள்ளதாக அரசியல் பார்வைகயாளர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை ெதாடர்ந்து, தேசிய அளவிலான அரசியல் பார்வை வேறு மாதிரியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைபாடு பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது. வக்பு திருத்த மசோதாவை பொருத்தமட்டில் மக்களவையில் 288 எம்பிக்கள் ஆதரவாகவும், 232 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் 128 வாக்குகள் ஆதரவாகவும், 95 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.

மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்களை பார்க்கும் போது, பாஜகவின் செயல் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், பாஜகவின் கூட்டணி கட்சிகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு அளித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 2024ல், வக்பு திருத்த சட்ட மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக்ஜன சக்தி போன்ற கட்சிகள் இந்த மசோதா குறித்த கவலைகளை எழுப்பின. அதனால் இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்பப்பட்டது. பாஜகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது ​​ ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக்ஜன சக்தி போன்ற கட்சிகள் வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

இதன் மூலம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு மேற்கண்ட கட்சிகள் மிகவும் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. இந்த கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் அங்கம் வகிக்காத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை கட்சிகள், மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது மசோதா மீது வாக்களிப்பது குறித்த தங்கள் எம்பிக்களுக்கு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் மேற்கண்ட இரு கட்சிகளின் எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்களா? அல்லது வாக்கெடுப்பை புறக்கணித்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும்பான்மை பலத்தை கொடுக்காத போது, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. மைனாரிட்டி பாஜக அரசு என்றும் கூட எதிர்கட்சிகள் கூறிவந்தன.

ஆனால் மக்களவை தேர்தலுக்கு பின்னர் மகாராஷ்டிரா, அரியானா, டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்ததால், கூட்டணி கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள் மாறிவிட்டன. அதேபோல் ஆந்திராவுக்கு கூடுதல் நிதியை கேட்டு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உடல்நிலை பாதிப்பு குறித்து வரும் அழுத்தங்களும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. அதனால் பாஜக தனது கொள்கையின்படி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (ஹாம்) ஆகிய கட்சிகளின் கூட்டணி தான் தேர்தலை எதிர்கொண்டாலும் கூட, அதிலும் பாஜகவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்கின்றனர்.

ஏனென்றால் பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சிக்கு குறைந்தளவு எம்எல்ஏக்கள் இருந்த போதும் அவர் தான் முதல்வராக உள்ளார். பாஜகவுக்கு அதிகளவு எம்எல்ஏக்கள் இருந்தும் துணை முதல்வர் பதவிதான் கிடைத்துள்ளது. எனவே அடுத்து வரும் தேர்தலில் நிதிஷ் குமாரை ஓரங்கட்டுவதற்கான வாய்ப்புகளை பாஜக உருவாக்கி வருகிறது. அவரும் மகாராஷ்டிரா பார்முலாவை பின்பற்றி விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு தள்ளப்படுவார் என்றே கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சமீபத்திய அரசியல் நிலைபாடுகள், கடந்த 2024 தேர்தலுக்கு முந்தைய பலத்தைப் போன்று பாஜக தற்போது பலத்தை பெற்றுள்ளது. அதனால் தான் தனது ஆதிக்கத்தை எதிர்க்கட்சிகளின் மீது திணிப்பதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற மனநிலைக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யுபிஎஸ்சி) தேர்வுகளில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்த விவகாரங்கள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். அதனால் ஒன்றிய அரசு தனது நிலைபாட்டில் பின்வாங்கியது. அதேபோல், ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதாவுக்கான திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கூட்டணி கட்சிகள், பாஜகவிற்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுப்பதில்லை. அதனாலேயே பெரும்பான்மை பலத்தை இழந்திருந்தாலும் கூட நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு திருத்த சட்ட மசோதாவை பாஜக நிறைவேற்றி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை கட்டுப்படுத்தி மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது பாஜக appeared first on Dinakaran.

Read Entire Article