
கொச்சி,
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
அவரை தொடர்ந்து, ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை செளமியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மூன்று பேரிடமும் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர்களுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீசார் தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். இது அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடனே நடந்துள்ளது. அவர் தொடர்ந்து சில மாதங்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும் அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌமியா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர்.