
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை தக்காளிமண்டி பேருந்து நிறுத்தம் அருகில் ருக்காராம் மகன் காலுராம் (வயது 32) என்பவர் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திக்கொண்டு மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். கடந்த 22.12.2022 அன்று காலுராம் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவி யசோதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று மாலை வீட்டிற்குள் நுழைந்த 3 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளயடித்து சென்றனர்.
இது சம்பந்தமாக ராயக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் புலன்விசாரணை மேற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலக்சிங் மகன் சங்கர்சிங் (22), சாவைசிங் மகன் சுரேந்திரசிங் (22), பக்காராம் மகன் லட்சுமணன்ராம் (38) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (28.04.2025) நீதிபதி இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கம் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலர்களை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.