மும்பை: போதை பொருள் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக நடிகை ராக்கி சாவந்த்துக்கு எதிரான ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கேடே வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரி சமீர் வான்கேடே, பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மற்றும் அவரது வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக்குக்கு எதிராக திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார். இந்த வழக்கில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறிய இருவரும், ரூ.11.55 லட்சம் இழப்பீடு கோரியதுடன், தனக்கு எதிராக கருத்து கூற தடை விதிக்கும் படியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வான்கேடே மேற்கண்ட அவதூறு வழக்கை தொடர்ந்து நட்த்த விரும்பவில்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் தேஷ்முக் கூறுகையில், ‘எங்களுக்கு இடையிலான பிரச்னைகளை சுமுகமாக தீர்த்துக்கொண்டோம். எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் புரிதலுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம். வான்கேடேயின் சகோதரி வழக்கறிஞர் யாஸ்மீன் வான்கேடேக்கு எதிராக நவாப் மாலிக் தொடர்ந்த கிரிமினல் வழக்கையும் நான் தான் கவனித்து வருகிறேன்’ என்றார். இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் மண்டல இயக்குநராக வான்கேடே பணியில் இருந்தபோது, அரபிக் கடலில் சிக்கிய கப்பலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தார். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பிடிபட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்முன் தமேச்சாவின் வழக்கில் தேஷ்முக் ஆஜராகிறார்.
அதேபோல் நடிகை ராக்கி சாவந்தின் சில வழக்குகளிலும் அவர் ஆஜராகிறார். சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கங்களை பதிவிட்டதாக ராக்கி சாவந்த் மற்றும் அவரது வழக்கறிஞர் தேஷ்முக்கிற்கு எதிராக சமீர் வான்கடே அவதூறு வழக்கு தொடுத்தார். தற்போது அவர்கள் மீது தொடுத்த வழக்கை சமீர் வான்கேடே வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை வாபஸ் பெறுவதாக கூறும் சமீர் வான்கேடேவும், தேஷ்முக்கும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அப்டேபாது இருவருக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்பட்டதாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post போதை பொருள் விவகாரத்தில் திருப்பம்: நடிகைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி appeared first on Dinakaran.