* பலத்த இடி, மின்னலால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த மக்கள், அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பு, பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடர்ச்சியாக 2 நாட்கள் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதிகாலை முதல் மீண்டும் மழை நீடித்ததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக் கூடும். அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்வேறு இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. பயங்கர இரைச்சலுடன் மழை நீடித்தது.
குறிப்பாக சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர், வண்ணாரப்பேட்ைட, புளியந்தோப்பு, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதே நிலை தான் புறநகர் பகுதியிலும் நீடித்தது. மழை வெளுத்து வாங்கியதால் சென்னைவாசிகள் தூக்கம்போனது என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன ஆக போகிறதோ? என்று நினைத்து சென்னைவாசிகள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலையில் சற்று மழை விட்டது. அப்போதுதான் சென்னைவாசிகளுக்கு நிம்மதி பிறந்தது என்று சொல்ல ேவண்டும். மழை விட்டதைப் பார்த்து பெருமூச்சு விட்டனர். சற்று இடைவெளியில் மீண்டும் காலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விட்டு, விட்டு மழை அடித்து நொறுக்கியது.
இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மோட்டார் சைக்களில் அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால், கார் போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களும் தங்களுடைய வாகனத்தை விடுத்து பஸ், ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர். இதனால், நேற்று காலை பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதே நேரத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பஸ்கள் மெதுவாகதான் இயக்கப்பட்டது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளை கடக்கவே வழக்கத்தை விட நேரம் அதிகமானது. தொடர் மழையால் தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்போர் சிலர் விடுப்பு எடுத்தனர். பெரும்பாலான அலுவலகங்களில் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், அலுவலகம் செல்வோர் வீடுகளில் இருந்தும் தங்களுடைய பணியை ெதாடங்கினர். நேற்று மாலை நேரத்திலும் மேலும் மழைநீடித்தது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து தடைபட்டது. இதனால், வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தான் செல்லும் நிலை ஏற்பட்டது. பஸ் செல்லும் தூரம் வரை சென்று, அதன் பிறகு நடந்தே மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
* காய்கறி, பால் வாங்க படையெடுத்த கூட்டம்
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை, நேற்று காலையும் நீடித்ததால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க மளிகைக் கடை, காய்கறி கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் காய்கறி, மளிகை கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு மக்கள் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், பல கடைகளில் பொருட்கள் அனைத்தும் வீற்றுத் தீர்ந்ததை காண முடிந்தது. மேலும் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
The post போதுமடா சாமி ஆளை விடுப்பா என்று சொல்லும் அளவுக்கு… சென்னையில் 2 நாட்களாக இடைவிடாது கொட்டித் தீர்த்த மழை appeared first on Dinakaran.