சென்னை,
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். தற்போது இவர் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில், "ஒவ்வொருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் இருப்பது சகஜம். சில பயங்கள் கூட நம்மை பின் தொடரும். நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சிலர் திடீரென்று என்னை செல்போன்களில் படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. நான் மரமோ அல்லது விலைமதிக்க முடியாத கட்டிடமோ இல்லை. உயிர் உள்ள மனுஷி அல்லவா என்று தோன்றும்.
உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு புகைப்படம் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்னை சுற்றி அதிக கூட்டம் இருந்து எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தால் கொஞ்சம் பயமாகவும், கூச்சமாகவும் இருக்கும். என்னை பாராட்டினாலும் அப்படித்தான் இருக்கும். உடனே எனக்குள் ஒன்று இரண்டு மூன்று என்று கணக்கு சொல்ல ஆரம்பிப்பேன். ஏதாவது அளவுக்கு மீறி யோசிக்கவும் செய்வேன். அந்த பழக்கத்தை விட்டு விட தினமும் தியானம் செய்கிறேன். நான் மிகக்குறைந்த அளவு மேக்கப் போட்டு சம்பிராதய முறைப்படி இருக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.