
லாகூர்,
நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அந்த அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியில் சில முன்னணி வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளூர் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் முன்னணி வீரரான சாத் ஷகீல் 'டைம்டு அவுட்' ஆன விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி வரும் இவர் உள்ளூர் தொடர் ஒன்றில் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இதில் நடைபெற்ற போட்டியின்போது அந்த அணியின் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், அடுத்த பேட்ஸ்மேனான சாத் ஷகீல் குறிப்பிட்ட நேரத்திற்குள் களத்திற்கு வரவில்லை. எனவே அவருக்கு டைம்டு அவுட் கொடுக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்றால் அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் களத்திற்குள் வர வேண்டும். இல்லையெனில், அவுட் கொடுக்கப்படும். அதன்படி சாத் ஷகீலுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
சாத் ஷகீல் தாமதமாக வந்ததற்கான காரணம் என்னவெனில், போட்டி நடைபெற்ற சமயத்தில் அவர் தூங்கியுள்ளார். அதன் காரணமாக அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய களமிறங்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 'டைம்டு அவுட்' ஆன முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சாத் ஷகீல் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.