
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இது எனது 2-வது ஐ.சி.சி. தொடர். கடந்த முறை நாங்கள் 50 ஓவர் உலககோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய போது நான் மிகப்பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன். ஏனெனில், அதுதான் எனக்கு ஐ.சி.சி தொடரின் முதல் இறுதிப் போட்டி. எனவே நான் அந்த போட்டியில் சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாட முயற்சித்து டைமிங்கை இழந்து விட்டேன்.
மிகப்பெரிய போட்டியில் ஆடும் போது எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இது போன்ற ஆட்டங்களில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாளுகிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.
கடந்த காலங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் நெருக்கடியான ஆட்டங்களில் அதாவது நாக்-அவுட் சுற்றில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்று இருக்கின்றன. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை நாங்கள் கைப்பற்றியுள்ளதால் இந்த இறுதி போட்டியிலும் எங்களுக்கு வெற்றி பெறும் உத்வேகம் இருக்கிறது.
இந்த இறுதி போட்டியில் நிச்சயம் நான் துவக்கத்தில் மைதானத்தின் தன்மையை கணித்து சிறிது நேரத்தை செலவிட்டு பின்னர் எனக்கான நேரம் கிடைக்கும் போது அதிரடியை வெளிக்காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.