
சென்னை,
சென்னை, அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மகளிர் தின விழா நடந்தது. விழாவில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
நாம் தேர்தல் அங்கீகாரத்தை எப்போதோ பெற்றிருக்க வேண்டும். கால் நூற்றாண்டு ஆகி தான் தமக்கு கிடைத்துள்ளது. அதற்கு நாம் பட்ட கஷ்டம் நமக்கு தான் தெரியும். ஆனால், இப்போது கட்சி தொடங்கினாலே யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன.
இன்னும் ஒரு தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் வாக்கு பெற முடியும், அடுத்த முதல்-அமைச்சர் இவர் தான் என பூதாகரப்படுத்துகின்றார்கள். வாக்கு சதவீதம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. ஆனாலும், சமூகம் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய சமூகத்தில் தான் போராடி போராடி அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். நம்முடைய வாக்கு வங்கி வலிமை பெற வேண்டும். அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று தொடர்ந்து சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் இடம்பெற வேண்டும். அப்போது தான் அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.