சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும். மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய்சேய்நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவை மற்றும் மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசர நிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலை கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து வசதியற்ற மலைவாழ் மக்களுக்கு ரூ.1.60 கோடி செலவில் 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.