சென்னை: இந்திய வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜ சார்பில் ‘சிந்தூர் யாத்திரை’ இன்று முதல் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இறுதி முடிவுகட்டும் வகையில், நம் இந்திய தேசம் தீவிரத்தாக்குதல் நடத்தியுள்ளது. கோழைகளைப் போல ராணுவ உடையில் வந்து, அப்பாவிப் பொதுமக்களை பஹல்காமில் கொன்ற கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் பயங்கரவாத பயிற்சிக் கூடங்களுக்கும், பாதுகாப்பு மையங்களுக்கும், நமது ஆயுதப்படைகளால், முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வீரத்துடனும் விவேகத்துடனும், வித்தகத்துடனும், வேகத்துடனும், துல்லியமாகத் தாக்குதல் நடத்தி, மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய, நமது ஆயுதப்படைகளையும், பிரதமர் மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் 4 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று முதல் யாத்திரையை தொடங்க உள்ளோம்.
இதனையடுத்து நாளை இதர முக்கிய நகரங்களிலும், மே 16 மற்றும் 17ம் தேதி மாவட்ட வாரியாகவும், மே 18 மற்றும் 19ம் தேதிசட்டசபை தொகுதிகள், தாலுகாவின் ஊர்கள், பெரிய கிராமங்கள் ஆகிய இடங்கள் வரையும் நம் தேசியக் கொடியான “மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள்” நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நம் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரிய அளவில் யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழக பாஜ சார்பில் இன்று முதல் ‘சிந்தூர் யாத்திரை’: தேசிய கொடி ஏந்தியவாறு 4 கட்டங்களாக பயணம் appeared first on Dinakaran.