மேட்டுப்பாளையம்: திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழ்நாடு, கேரள, கர்நாடகா மாநிலங்களின் எல்லை பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கிருந்து அன்னூர், கோவை, கோத்தகிரி, குன்னூர், சத்தியமங்கலம் சாலைகளில் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் இருக்கும். குறிப்பாக, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அவிநாசி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், நாளுக்கு நாள் மேட்டுப்பாளையம்-அன்னூர்-அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ரூ.250கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக உள்ள மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை சுமார் 38 கிமீ தொலைவிற்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
4 வழிச்சாலையாக மாற்றப்படுவதையொட்டி முதற்கட்டமாக தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இச்சாலையின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. தொடர்ந்து சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 1,300 மரங்களும் அகற்றப்பட உள்ளது. மேலும், 16 பாலங்களை மறுசீரமைப்பு செய்தும், 6 புதிய பாலங்களை கட்டவும் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதையொட்டி அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள ஆட்டையம்பாளையம் பிரிவு, தென்னம்பாளையம் பிரிவு, அன்னூர் சந்திப்பு, தென்திருப்பதி நால்ரோடு சந்திப்பு உள்ளிட்ட 6 சாலை சந்திப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் வருங்காலங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘4 வழிச்சாலைக்காக வெட்டி அகற்றப்பட உள்ள மரங்களுக்கு பதிலாக தற்போது மரங்களை நடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். முதற்கட்டமாக இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூருக்கு குடிநீர் திட்ட குழாய்கள் இச்சாலையின் வழியே கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அதனையும் இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ள ஆறு சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. இன்னும் ஓராண்டிற்குள் இச்சாலை முழுவதுமாக 4 வழிச்சாலையாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்’’ என்றனர்.
The post போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை ரூ.250 கோடியில் 4 வழிச்சாலையாகிறது appeared first on Dinakaran.