
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-
பெண்கள் வாழ்க்கையில் விடியல் பயணம் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1,200 சேமிப்பு வருகிறது என தனியார் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. விடியல் பயணம் அறிவிக்கப்பட்ட 4 ஆண்டுகளில் இதுவரை 670 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த முறை ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு தனித்தனியாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும். 1,024 வாரிசுதாரர்களுக்கு இதுவரை பணி வழங்கப்பட்டுள்ளது. 67 பெண் நடத்துனர்களுக்கு அண்மையில் பணி வழங்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்து வாங்கும் இடத்திலேயே பராமரிப்பு பணியை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 2025-26 நிதி ஆண்டில் 750 புதிய பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1,000 பேருந்துகளை சி.என்.ஜி.யாக மாற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாழ்பட்டு, சீர்கெட்டு கிடந்த போக்குவரத்து துறையை புதிய பேருந்துகள் வாங்கி மீட்டெடுத்து வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்தியாவில் 28% போக்குவரத்து விருதுகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.