சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்படுகிறது. மேலும், மாதந்தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டுமானால் கூடுதலாக ரூ.73.42 கோடி தேவைப்படுகிறது. இதனை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.