போகியன்று கடும் பனி, புகைமூட்டம் காரணமாக: சென்னையில் விமான சேவை நேரத்தில் மாற்றம்

2 hours ago 2

மீனம்பாக்கம்: பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், டயர் போன்றவற்றை தெருக்களில் எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படும். மேலும் பனியின் தாக்கமும் காணப்படும். அதனால் பிளாஸ்டிக் கழிவுகள், டயர்களை எரிக்க வேண்டாம் என அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், சென்னை விமான நிலைய மற்றும் பல்வேறு ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 13ம் தேதி அதிகாலை மற்றும் காலைநேர விமானங்களின் வருகை, புறப்பாடு சேவைகளின் நேரத்தை மாற்றியமைத்துள்ளனர்.

இதன்படி, மஸ்கட்டிலிருந்து வரும் ஓமன் ஏர்வேஸ் விமானம், துபாயிலிருந்து வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து வரும் ஏர்ஏசியா விமானம் அதிகாலை சென்னைக்கு வராமல், தாமதமாக வந்துவிட்டு மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், லங்கன் ஏர்லைன்ஸ் போன்றவை போகி தினத்தில் தங்களின் பயண நேரத்தை மாற்றியமைக்க ஆலோசித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும் முறையாக குறுந்தகவல் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ உள்பட பல்வேறு உள்நாட்டு விமானங்களும் போகி பண்டிகையன்று ஏற்படும் கடும் பனி மற்றம் புகைமூட்டத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க, அதிகாலை மற்றும் காலைநேர விமானசேவை நேரங்களை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான பயணிகளுக்கு முறையாக குறுந்தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தெருக்களில் தீயிட்டு எரிக்க வேண்டாம்’ என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post போகியன்று கடும் பனி, புகைமூட்டம் காரணமாக: சென்னையில் விமான சேவை நேரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article