சென்னை, ஜன.18: போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், பழைய துணி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எரிப்பதை தடுத்து, 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை 34,748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடம் பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக், டயர் மற்றும் பழைய துணி உள்ளிட்ட இதரப் பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் பெறப்பட்டன.
அதனடிப்படையில் கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 31.79 மெட்ரிக் டன் பழைய துணிகள், 18.80 மெட்ரிக் டன் டயர் மற்றும் டியூப்கள், 24.14 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள், 12.31 மெட்ரிக் டன் இதரப் பொருட்கள் என மொத்தம் 87.32 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பெறப்பட்டன. அதனடிப்படையில் கடந்த 11ம் தேதி 5,424 மெட்ரிக் டன், 12ம் தேதி 5,827 மெட்ரிக் டன், 13ம் தேதி 5,958 மெட்ரிக் டன், 14ம் தேதி 6,233 மெட்ரிக் டன், 15ம் தேதி 5,851 மெட்ரிக் டன், 16ம் தேதி 5,455 மெட்ரிக் டன் என கடந்த 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை மொத்தம் 34,748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பெறப்பட்டு அகற்றப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post போகிப் பண்டிகையின் போது எரிப்பதை தடுத்து பிளாஸ்டிக், பழைய துணி உள்ளிட்ட 87.32 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.