போகி பண்டிகை கொண்டாட்டத்தால் புகை மண்டலமான சென்னை மாநகரம்: மழை காரணமாக காற்று மாசு குறைவு

16 hours ago 3

சென்னை: போகி பண்டியையொட்டி சென்னை மாநகர் முழுவதும் புகை மண்டலமாக நேற்று காட்சியளித்தது. இந்தாண்டு மழை காரணமாக மிதமான அளவில் காற்று மாசடைந்ததாக மாசுகட்டுப்பாடு வாரியம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தினத்திற்கு முன்பாக பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பொதுமக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் ஊர்வலம் வந்தனர்.
இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னை மாநகரம் முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் புகை காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சாலையில் சென்றனர். அதேபோல், புறநகர் மின்சார ரயில்கள் புகை மூட்டம் அதிகம் காணப்பட்டதால் ஒலி எழுப்பியபடி இயக்கப்பட்டன.

மேலும், 30 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாது, குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் காலை புகை மூட்டத்துடனும், பனிப்பொழிவும் கலந்து இருந்ததால் வானம் வெண்மையாக காட்சி அளித்தது. அதேபோல், சென்னையில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக போகி கழிவுகளை எரித்த புகை பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டை விட இந்தாண்டு போகி பண்டிகைக்கான காற்று தரக்குறியீடு அளவு குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மணலியில் தான் அதிகபட்சமாக 132 தரக்குறியீடு பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்து பெருங்குடியில் 111, ராயபுரத்தில் 104, அரும்பாக்கத்தில் 98, கொடுங்கையூரில் 81, ஆலந்தூரில் 77, வேளச்சேரியில் 67 என பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post போகி பண்டிகை கொண்டாட்டத்தால் புகை மண்டலமான சென்னை மாநகரம்: மழை காரணமாக காற்று மாசு குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article