சென்னை: 10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பாஜக நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் கைதாகும் போது அதிமுக அமைதி காக்கிறது. இவ்வளவுதான் அதிமுக - பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பாஜகவும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பாஜக - அதிமுக கள்ளக் கூட்டணி ‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனக் கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.