
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மகளிர் நீதிமன்றம், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி மனதார வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நீதி கோரிய அனைவருக்கும் மாபெரும் வெற்றியாகும்.
2019-ல் ஒரு துணிச்சலான பெண்ணின் புகாரால் வெளிச்சத்திற்கு வந்த இந்த வழக்கு, தமிழகத்தையே உலுக்கியது. சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் அந்த கும்பல் ஈடுபட்டது. சிபிஐ-யின் ஆறு ஆண்டு விசாரணையில் 250-க்கும் மேற்பட்ட பெண்களை பாதித்ததாக தெரியவந்தது.
எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிக்காக போராடினர். இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக அமையும்.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க, மேம்பட்ட சட்ட அமலாக்கம், சமூக விழிப்புணர்வு மற்றும் மாற்றங்கள் அவசியம். இந்தத் தீர்ப்பு, பெண்கள் தைரியமாக புகார் அளிக்கவும், சமூகம் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் உந்துதலாக இருக்கும். இந்திய நீதித்துறையின் உறுதியை வெளிப்படுத்தும் இந்தத் தீர்ப்பு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்திற்கு முக்கிய மைல் கல்லாகும். சமூகம் ஒன்றிணைந்து, பெண்களுக்கு நீதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தத் தீர்ப்பு ஒரு அழைப்பாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.