கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து என திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையிலும், இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்ற அளவில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பி விடுவார்களோ என்ற அய்யம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பெண்களுக்கு மட்டுமின்றி, மனித நேயம் உள்ள அனைவருக்கும் கொடுங்காயத்தில் இடப்பட்ட மாமருந்தாக அமைந்திருக்கிறது. இந்த வழக்கில் திமுக, அதிமுக, விசிக என யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. வழக்கில் சான்றுகள் வலுவாக இருந்தன. செல்போன்கள் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடயங்கள் ஆதாரங்களாக இருந்துள்ளது. ஆகவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை. மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள். யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு, அந்த வழக்கு என அணுக முடியாது. பாலியல் வல்லுறவு குற்றங்கள், சமூக வலைதளங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களை கையாள்வதில் அரசு சில வரையறைகளை கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் தடம்மாற கூடிய வகையில் ஆபாச வலைத்தளங்கள் மிக இயல்பாக பயன்பாட்டிற்கு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு இவையும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கியதில் இருந்து பள்ளி, கல்லூரி வளாகங்களை தங்களது களமாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வளாகங்களில் ஷாகா பயிற்சி நடத்துவது இன்றும் தொடர்கிறது. யோகா சொல்லி தருவதாக கூறி மதவாத அரசியலை பிஞ்சு உள்ளத்தில் பதியவைப்பது தொடர்கிறது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு; கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.