
கோவை,
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால், 2019ல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்த வழக்கு, பின் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13ல் அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினிதேவேியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், நீதிபதி நந்தினிதேவியின் பணியிட மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் திட்டமிட்டபடி 13-ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற நடவடிக்கைக்கு சிறிது காலம் ஆகும் என்பதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பின்னரே கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.