
புதுடெல்லி,
இந்தியாவின் தலைபோன்று உள்ள காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.
மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் கூறினார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது. மேலும் இந்தியாவின் நிலை பற்றி உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக பல்வேறு நாட்டு தூதர்களின் கூட்டத்தையும் வெளியுறவுத்துறை நடத்தியது.
இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், தன் பங்குக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தான் வான்பரப்பையும் மூடுவதாக அறிவித்தது.
இதனிடையே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூட்டை நடத்த தொடங்கியது. இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 4-வது நாளான நேற்று முன்தினம் இரவு இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டது இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லைப்பகுதியில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்திய விமானப்படையும், கடற்படையும் தீவிர போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இது வழக்கமாக நடைபெறும் பயிற்சி என்றாலும், அதை பாகிஸ்தான் தங்களுக்கான சவாலாக பார்த்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஹனீப் அப்பாசி, இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தினால் போர் வெடிக்கும். எங்களிடம் 130 அணு குண்டுகள் உள்ளன. அவை அனைத்தும் இந்தியாவுக்காகத்தான் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
அதே நேரம் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய நிலவரங்களை பிரதமரிடம் அவர் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் இல்லத்தில் நடக்கும் ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அவரச ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.