பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகிறது. அதுபோல் பந்தல் காய்கறிகளான புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் உள்ளிட்டவை சுற்றுவட்டார பகுதியில் அறுவடை அதிகமாக உள்ளது. இதை உள்ளூர் பகுதி வியாபாரிகள் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதில், புடலங்காயானது வடக்கிபாளையம், சுப்பேகவுண்டன்புதூர், ஆனைமலை, தாத்தூர், சமத்தூர், கோமங்கலம், கோட்டூர், பொன்னாபுரம், கோவில்பாளையம், சூலக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
தென்மேற்கு பருவமழைக்கு பிறகு கடந்த சில வாரத்திற்கு முன்பு நல்ல விளைச்சலடைந்த புடலங்காய்களை அறுவடை செய்வதை, விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தற்போது பல கிராமங்களில், செடியில் காய் பருவத்துக்கு முன்னதாக பூக்கள் பூத்து குலுங்குகிறது. மேலும், கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமம் மட்டுமின்றி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மடத்துக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியிலிருந்தும் புடலங்காய் வரத்து அதிகமாக இருந்ததால், அதன்விலை மிகவும் சரிந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மார்க்கெட்டில் ஒரு கிலோ புடலங்காய் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டன. ஆனால் தற்போது சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்து புடலங்காய் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால், ஒரு கிலோ ரூ.20 முதல் 25வரை என மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் புடலங்காய் அறுவடை தீவிரம்: கிலோ ரூ.20ஆக சரிந்தது appeared first on Dinakaran.