ஊட்டி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வது தான் பழனிசாமியின் வேலையாக இருக்கிறது.” என்றும் சாடியுள்ளார்.
ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 14) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.