பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

2 weeks ago 2

சென்னை,

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்-அமைச்சர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெரியார் திராவிட கழகம் சார்பில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்

இதற்கிடையே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர்பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது, குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அமைச்சர் பொன்முடிக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Read Entire Article