பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக மருத்துவ கழிவு கொட்டிய தனியார் லாரி பறிமுதல்

1 month ago 9

* உரிமையாளர் மீது போலீசில் புகார்
* மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட வெற்றி விநாயகர் நகர் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில் தனியார் சிலர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து, சட்டவிரோதமாக கொட்டி வருகின்றனர். நீண்ட காலமாக இந்த கழிவுகளை இங்கு கொட்டியதால், மலைபோல் மருத்துவ கழிவுகள் குவிந்து, துர்நாற்றம் வீசிவருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், வார்டு திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளர் சுமித்ரா, உதவி பொறியாளர் பொன்னுரங்கம், கவுன்சிலர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.

அதிகாரிகள் அந்த லாரிகளை சோதனை செய்த போது, அபாயகரமான மருத்துவ கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இனிமேல் இதுபோல் கழிவுகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது என எச்சரித்து, 2 லாரிகளுக்கும் அபராதம் விதித்து, எழுதி வாங்கிக்கொண்டு லாரிகளை விடுவித்தனர். ஆனால், சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகளை அரசு நிலத்தில் கொட்டிய லாரியை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ரஜினிஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் பாபு ஆகியோர், மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரி உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிய வேண்டும் என கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, அந்த 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மண்டல அலுவலகம் கொண்டு வந்தனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக மருத்துவ கழிவு கொட்டிய தனியார் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article